Thiru TV Blog உள்நாட்டுச் செய்திகள் புதிய செயலக நியமனங்கள்: ஆளுநரின் செயலாளர் உள்ளிட்ட முக்கிய மாற்றங்கள்
உள்நாட்டுச் செய்திகள்

புதிய செயலக நியமனங்கள்: ஆளுநரின் செயலாளர் உள்ளிட்ட முக்கிய மாற்றங்கள்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் வடக்கு மாகாணத்தின் 5 செயலாளர்கள், மாநகர சபை ஆணையாளர் மற்றும் பதில் ஆணையாளர் ஆகியோருக்கான நியமனங்கள் ஆளுநர் செயலகத்தில் வைத்து இன்று புதன்கிழமை நண்பகல் (16.07.2025) வழங்கி வைக்கப்பட்டன.

பருத்தித்துறை பிரதேச செயலராகக் கடமையாற்றிய எஸ்.சத்தியசீலன் வடக்கு மாகாண சபைக்கு புதிதாக உள்வாங்கப்பட்டிருந்த நிலையில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக கடமையாற்றிய மு.நந்தகோபாலன், மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோப்பாய் பிரதேச செயலராகக் கடமையாற்றிய ச.சிவஸ்ரீ வடக்கு மாகாண சபைக்கு புதிதாக உள்வாங்கப்பட்டிருந்த நிலையில், வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் பதில் செயலாளராகக் கடமையாற்றிய அ.சோதிநாதன் அதே அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரம், மாகாண காணி பதில் ஆணையாளராகவும் அவரே நியமிக்கப்பட்டுள்ளார்.

மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பதவி வெற்றிடமாக இருந்த நிலையில், வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய ஆ.சிறீ நியமிக்கப்பட்டுள்ளார்.

மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய பொ.வாகீசன், வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசனும் கலந்துகொண்டிருந்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு
16.07.2025

Exit mobile version